கள்ளச்சாராயம்: நால்வர் பலி
விழுப்புரம்: கள்ளச்சாராயம் அருந்திய நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள எக்கியார் குப்பம் பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் விற்று வந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அதை வாங்கி குடித்துள்ளனர். எனினும், வீடு திரும்பிய அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். மற்றவர் களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டில் மாயமான தமிழர்
சென்னை: ஓட்டுநர் பணிக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்ற ஆடவர் மாயமாகிவிட்டதாகவும் அவரை மீட்டுத் தரக் கோரியும் வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த அருணாச்சலம் கடந்த 25 நாள்களாகத் தனது குடும்பத்தாரைத் தொடர்புகொள்ள வில்லை என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
கொலை மிரட்டல்: நடிகர் மீது புகார்
சென்னை: தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திரைப்பட நடிகர் சரவணன் மீது அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தம்மைப் பிரிந்துள்ள நிலையில், 30 ரவுடிகளுடன் வீடு தேடி வந்து தம்மை மிரட்டியதாக அவர் கூறியுள்ளார்.

