டிஜிபி: கள்ளச்சாராயத்தை ஒடுக்க தேடுதல் வேட்டை

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் கள்­ளச்­சா­ரா­யம் விற்போர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு எச்சரிக்கை விடுத்­துள்­ளார்.

கள்­ளச்­சா­ரா­யம் விற்­பனை செய்­வோ­ரைக் கண்­ட­றிந்து கைது செய்ய ஏது­வாக மாநி­லம் முழு­வ­தும் காவல்­துறை சிறப்­புத் தேடு­தல் வேட்­டை­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

விழுப்­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் கள்­ளச்­சா­ரா­யம் அருந்­திய 12 பேர் மாண்­டு­விட்­ட­னர். மேலும் சிலர் கடும் பாதிப்­பு­கள் கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கள்­ளச்­சா­ராய விற்­ப­னை­யைத் தடுக்க தமி­ழக அரசு உரிய நட­வடிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை என எதிர்க்­கட்­சி­கள் சாடி உள்­ளன.

இந்­நி­லை­யில், தமி­ழ­கம் முழு­வதும் கள்­ளச்­சா­ரா­யம் விற்­ற­தாக இது­வரை 136 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

அவர்­கள் மீது 199 வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் விழுப்­பு­ரம் மாவட்­டத்­தில் மட்­டும் 57 பேர் பேரும் திரு­வா­ரூர் மாவட்­டத்­தில் 47 பேரும் கைதாகி உள்­ள­னர் என்­றும் டிஜிபி சைலேந்­திர பாபு தெரி­வித்­தார். இவர்­களில் டாஸ்­மாக் மதுப்­புட்­டி­களை மறைத்து வைத்து விற்­போ­ரும் அடங்­கு­வர். கள்­ளச்­சா­ரா­யம் விற்­ப­வர்­களைக் கைது செய்­வ­தில் தீவி­ரம் காட்ட வேண்­டும் என அதி­கா­ரி­க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கள்­ளச்­சா­ராய மர­ணம் தொடர்­பாக சிலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும் சில­ருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது என்­றும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே கள்­ளச்­சா­ராய சம்­ப­வம் தொடர்­பாக காவல்­துறையைச் சேர்ந்த சிலர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மாநி­லம் முழு­வ­தும் நடை­பெற்று வரும் தேடு­தல் வேட்­டை­யின்­போது மேலும் பலர் கைதாவார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, கள்­ள­சா­ராய மர­ணம் தொடர்­பாக சிபி­சி­ஐடி விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­படும் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று விழுப்­பு­ரம் மாவட்­டத்­துக்­குச் சென்ற அவர், கள்­ளச்­சா­ரா­யம் குடித்து உயி­ரி­ழந்­தோரின் குடும்­பத்­தி­ன­ருக்கு நேரில் ஆறு­தல் கூறி­னார்.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளை­யும் நேரில் சந்­தித்து அவர் நலம் விசா­ரித்­தார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கள்­ளச் சாராய விற்­ப­னையை முழு­மை­யாக தடுக்க வேண்­டும் என்ற உத்­தரவை நடை­மு­றைப்­ப­டுத்த தவறி­ய­வர்­கள் மீது உரிய நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்றார்.

மேலும் குற்­ற­வா­ளி­க­ளைக் கைது செய்ய காவல்­துறை உரிய நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு; 136 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது