செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மூன்று கிலோ தங்கம் பறிமுதல்

கோவை: சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மூன்று கிலோ தங்கத்தை கோவை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை, சென்னையைச் சேர்ந்த இருவர் கைதாகி உள்ளனர். இருவரும் தங்களது சட்டைப்பைகளிலும் உள்ளாடைகளிலும் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தனர். கடத்தல் தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.1.09 கோடி ஆகும்.

கள்ளச்சந்தையில் ஐபிஎல் போட்டி நுழைவுச்சீட்டுகள்: ஒன்பது பேர் கைது

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பது நீடித்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து, காவல்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்தது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சேப்பாக்கம் விளையாட்டு அரங்குக்கு அருகேயுள்ள பகுதிகளில் சிலர் நுழைவுச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்றபோது காவல்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து சில நுழைவுச்சீட்டுகளும் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒன்பது பேர் கைதாகினர்.

வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியின் கைகள் சிதைந்தன

மயிலாடுதுறை: வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தபோது எதிர்பாராத விதமாக அவற்றுள் ஒன்று வெடித்துச் சிதறியதில், மயிலாடுதுறையைச் சேர்ந்த ரவுடியின் கைகள் சிதைந்தன. கலைவாணன் என்ற அந்த ரவுடி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்ததை அடுத்து, கடந்த ஆண்டு அவர் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், தன் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்க முற்பட்டபோது அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொது இடங்களில் குப்பை கொட்டாதீர்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டுபவர் களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 11ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.11.55 லட்சமும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டியவர்களுக்கு ரூ.9.93 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. மொத்தத்தில் அபராதங் கள் மூலம் ரூ.21.48 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரைத் தூய்மையாகவும் அழகுடனும் பராமரிக்க 'சிங்கார சென்னை 2.0' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

துபாய் யோகா போட்டி: தங்கப்பதக்கம் வென்ற தமிழக மாணவர்கள்

கோவை: துபாயில் நடைபெற்ற அனைத்துலக யோகா போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கப்பதக்கம் பெற்று சாதித்துள்ளனர். தேசிய அளவில் வெற்றி பெற்ற அம்மாணவர்கள் துபாய் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த 8ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்கு நடைபெற்ற போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட நான்கு தமிழக மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர். இவர்களில் மூன்று பேர் பள்ளி மாணவர்கள் என்றும் ஒருவர் கல்லூரி மாணவர் என்றும் யோகா ஆசிரியர்கள் தெரிவித்தனர். நால்வரும் கோவையைச் சேர்ந்தவர்கள். துபாய் போட்டியில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, மஸ்கட், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.