நாமக்கல்: வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதால் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் பதற்றம் நிலவியது.
நேற்று முன்தினம் அந்தக் கொட்டகைக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்தனர். இதில், அக்கொட்டகையில் தங்கியிருந்த நான்கு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
காயமடைந்த தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள கரும்பு ஆலையில் வேலை பார்க்கின்றனர் என்றும் குற்றவாளிகளைப் பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வரும் கோவை, திருப்பூர், கரூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வேறு அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அம்மாவட்டங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

