கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே குடிபோதையில் 100 அடி உயர பனைமர உச்சியில் தூங்கிய குடிகாரப் பேர்வழி ஒருவரை பத்திரமாகக் கீழே இறக்க காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் படாதபாடுபட்டனர்.
ஆனைமலை அருகே உள்ள செம்பனாம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கே. லட்சுமணன், 42, என்பவர் தென்னை, பனை மரங்களில் ஏறி காய்களைப் பறிப்பவர். அவர், ஜமீன் கோட்டாம்பட்டி என்ற ஊரில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்தில் முழு குடிபோதையில் பனைமர உச்சியில் ஏறி மட்டைகளுக்கு நடுவே வசதியாக தூங்கிவிட்டார்.
கொஞ்சம் போதை தெளிந்ததும் விழித்துக்கொண்ட லட்சுமணன், பயந்துபோய் அலறினார். அப்போது அந்த வழியே வந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
காவலர்கள் வந்து லட்சுமணனை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிறகு தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயரே நீண்டு செல்லும் கூண்டுடன் கூடிய தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு ஒரு வழியாக லட்சுமணன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

