சென்னை: தமிழ்நாட்டின் சிலைத் தடுப்பு உளவு காவல்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக சோதனை நடத்தினர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சோஃபா துரைராஜன் என்ற சிலை சேகரிப்பாளர் வீட்டில் இருந்து 14 கலையம்ச பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அந்த வீட்டில் பூட்டப்பட்டிருந்த ஓர் அறையில் இருந்து அந்தப் பொருள்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நான்கு உலோகச் சிலைகள், ஆறு தஞ்சாவூர் ஓவியங்கள், மரத்தால் ஆன நான்கு கலைப்பொருள்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
சோஃபா துரைராஜன் வெளிநாட்டில் வசிப்பதாக தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி காவல்துறை தெரிவித்தது.
அரிய வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகளைக் கடத்தி பிடிபட்ட தீனதயாளன் என்பவர் அதிகாரிகளிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அந்தச் சோதனை இடம்பெற்றது.
சோஃபா துரைராஜன் வீட்டில் டிசம்பரில் முதன்முதலாக நடந்த சோதனையில் ஆறு சிலைகள் கைப்பற்றப்பட்டன.
தீனதயாளனிடம் இருந்து சோஃபா துரைராஜன் மேலும் அரிய புராதனச் சிலைகளை வாங்கி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 55 சிலைகள் கைப்பற்றப்பட்டன.
வீட்டின் சாவியை ஒப்படைக்கும்படி அதிகாரிகள் சோஃபா துரைராஜனைக் கேட்டிருந்தனர்.
சாவி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைஅடுத்து ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
தீனதயாளன் இப்போது உயிரோடு இல்லை. அவர் ஆழ்வார்பேட்டையில் அபர்ணா கலைக்கூடம் என்ற பெயரில் ஒரு கலைக்கூடம் நடத்தி வந்தார். அந்தக் கலைக்கூடத்தில் இருந்து சோஃபா துரைராஜன் பல பொருள்களை வாங்கி இருப்ப தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

