செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

அதிமுக விதிகள்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

புதுடெல்லி: அதிமுகவில் தலைமை பதவியைக் கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. அதையடுத்து கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டன. அந்தத் திருத்தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தியது.

அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்திருந்த தேர்தல் ஆணையம், திருத்தங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

லைகா அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு நேற்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லைகா நிறுவனம் தமிழில் பல பெரிய திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. அண்மையில் அந்த நிறுவனம் தயாரித்த 'பொன்னியின் செல்வன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சென்னை தி.நகரில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

தரங்கம்பாடி மீன் விற்பனை

துறைமுகம் திறப்பு

தரங்கம்பாடி: மயிலாடுதுறை தாலுக்காவில் அமைந்துள்ள தரங்கம்பாடி மீன் விற்பனை துறைமுகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்துவைத்தார்.

ரூ.120 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த மீன்விற்பனை துறைமுகத்தில் 1,070 மீட்டர், 340 மீட்டர் நீளமுள்ள இரண்டு உப்பங்கழிகள், 340 மீட்டர் நீள கரைப்பகுதி, சாய்வான தளம், படகுகளைப் பழுதுபார்க்கும் இடம், மீன் சந்தை, வலைகளை உலர்த்தும் இடம் உள்ளிட்ட பலவும் அமைந்துள்ளன.

புதிய துறைமுகம் பற்றி கருத்து தெரிவித்த தரங்கம்பாடி மீனவர் பிரநிநிதியான ஜி செந்தில்குமார், "பழுதுபார்ப்பு வேலைகளுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாகப்பட்டினம் போகவேண்டும். மீன்களைத் தெருக்களில் விற்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. புதிய துறைமுகம் பெரிதும் உதவும்," என்று தெரிவித்தார்.

தமிழக அரசு: கேரளா ஸ்டோரி படத்திற்குத் தடையில்லை

சென்னை: தமிழ்நாட்டில் 'கேரளா ஸ்டோரி' படத்திற்குத் தடை இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு சரி இல்லை என்பதால் மாநிலம் முழுவதையும் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை மே 7ஆம் தேதி முதல் நிறுத்திவிட்டதாக அது கூறியது.

படத்திற்கு ஆதரவு இல்லை; படத்தில் பிரபலமான கலைஞர்கள் நடிக்கவில்லை. இவை படம் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் என்று அவர்கள் தெரிவித்ததாகவும் அரசு நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.

மின் விநியோகம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக மின் வாரியம் தட்டுப்பாடின்றி மின் விநியோகம் செய்து வருகிறது. தமிழக ஊரகப் பகுதிகளில் மின் விநியோகம் உயர்ந்ததைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் தடைபடா மின் விநியோகம் வழங்க மத்திய அரசு உதவும் என்றும் அது கூறியுள்ளது.