கருணாநிதி பிறந்தநாளில் சர்க்கரைப் பொங்கல்
சென்னை: சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்துவரும் மாணவ மாணவியருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அண்மையில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை நேற்று வெளி யிடப்பட்டது. மாநிலம் முழுவதும் 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவரும் 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 லட்சம் குழந்தை களும் இதன்மூலம் பயன்பெறுவர் என்று அரசாணை குறிப்பிடுகிறது. ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாள் ஆகும்.
600 மீட்டர் நீள ஆகாய நடைபாதை
சென்னை: சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகரில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் மேட்லி சாலை ஜங்ஷன் வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் 600 மீட்டர் நீளமும் 4.20 மீட்டர் அகலமும் கொண்டது. செவ்வாய்க்கிழமை இந்த நடை மேம் பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
குற்றவாளிக்கு ரூ.50,000 நிவாரணம்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச் சாராயம் விற்ற அமாவாசை என்பவர் கைது செய்யப்பட் டார். கள்ளச்சாராயத்தை அவரும் குடித்ததால் செங்கல் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அந்தப் பட்டியலில் அமாவாசையும் இடம்பெற்றிருந்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டாக மாறாத பெட்ரோல் விலை
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 மே 21ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட் டிருந்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் விலை ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும் டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதே விலை கிட்டத்தட்ட ஓராண்டாக, அதாவது 361வது நாளாக நேற்றும் மாற்றமின்றி தொடர்ந்தது.
பெரும் போராட்டம்: அதிமுக யோசனை
சென்னை: ஓ.பன்னீர்செல்வம்-டிடிவி தினகரன் கூட்டு சேர்ந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. சென்னை ராயப் பேட்டையிலுள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளு மன்றத் தேர்தல் தொடர்பான விவாதங்கள் நடைபெற்ற தாகக் கூறப்பட்டது. மேலும், திமுக அரசுக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ரூ.535 கோடி பணம்... திக்...திக்...
சென்னை: ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு 1,000 கோடி ரூபாய் கொண்டு சென்ற
2 வாகனங்களில் ஒன்று (படம்) தாம்பரம் அருகே பழுதானது. அந்த வாகனத்தில் ரூ.535 கோடி பணம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் துறைக்குத் தகவல் தரப்பட்டது. விரைந்து சென்ற காவலர்கள் வாகனத்தை இழுவை வண்டி மூலம் அவரமாக இழுத்துச் சென்று, சித்தா மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தினர். தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் அந்த வாகனத்துக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டது.

