சென்னை: தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சித் தலைவர்களை அரசு நியமித்து உள்ளது. அவர்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்ணுசந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் கணவன்-மனைவி. இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு மூன்று வயதில் பத்மா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையுடன் இருக்கும் தம்பதி என்பதால் பக்கத்து பக்கத்து மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் இவர்களை அரசு நியமித்துள்ளது. இந்த நியமனம் குறித்து ஆஷா அஜித் கூறுகையில், "நாங்கள் இருவருமே முதல்முறையாக கலெக்டர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதோடு எங்கள் பொறுப்பையும் அதிகமாக்கி இருக்கிறது.
"எங்களைப் போன்று பல தம்பதிகள் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிகிறார்கள். குடும்பம் நடத்துவதை இருவரும் சிரமமாகக் கருதுவதில்லை.
"அருகருகே உள்ள மாவட்டங்களில் பணிபுரிவதால் அவசரத் தேவைகளுக்கு இருவரும் எளிதாகச் சந்தித்துக்கொள்ள முடியும். அரசு எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றுவோம்," என்றார்.

