சென்னை: வெளிநாடு சென்று திரும்பியவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தைப் பறித்த ஆயுதப்படை காவலர் உட்பட இருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா என்பவர், சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்துள்ளார். இவர் 30 லட்சம் ரூபாய் பணத்துடன் திருவல்லிக்கேணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது மன்றோ சிலை அருகே காக்கிச் சீருடையில் நின்றிருந்த இருவர், தாங்கள் காவலர்கள் எனக் கூறி அழகுராஜாவை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
30 லட்சம் ரூபாய் பணத்திற்குண்டான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால், அது ஹவாலா பணம் என்று கூறி பணத்தைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஹவாலா பணத்தைப் பறித்துச் சென்ற இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆயுதப்படை காவலர் செந்தில், அவரது நண்பர் டைசன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. தலைமறைவான செந்திலின் நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அழகுராஜா வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் 'குருவி'யாகச் செயல்பட்டு வருவதும் விசாரணையில் அம்பலமானது.

