சென்னை: பொருநை அருங்காட்சியகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். மொத்தம் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி செலவில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது.
அதன் பின்னர் பண்டைக் கால மனித நாகரிகத்துக்கு சாட்சியாக இந்த அருங்காட்சியகம் விளங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதியில் அமைந்துள்ள 'ஆதிச்சநல்லூர்' மனித நாகரிகத்தின் தொட்டில் எனக் குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியை மத்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.
"ஆதிச்சநல்லூரில் நடத்திய அகழாய்வின்போது கிடைத்த ஏராளமான தொல் பொருள்களை காட்சிப்படுத்தும் வகையில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்," என தமிழக தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதிச்சநல்லூர் அகழாய்வின்போது பண்டைக் கால மனிதர்கள் பயன்படுத்திய ஓடுகள், இரும்புப் பொருள்கள், காதணிகள், மண்பாண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருள்கள் கிடைத்தன.
இதையடுத்து பழங்கால இயற்கை துறைமுகமாக இருந்த கொற்கையிலும் அகழாய்வு நடத்தப்பட்டது. மேலும், சிவகளை பகுதியில் நடத்திய அகழாய்வில் பண்டைக் கால மனிதர்கள் வாழ்வில் பயன்படுத்திய பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்தே இப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழர்களின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
"பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் போது, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களிலும் அகழாய்வில் கிடைத்த பண்டைக் கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதற்காக மூன்று தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட உள்ளது," என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருங்காட்சியகப் பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்றும் பின்னர் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

