94,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல்; விளக்கம் கேட்கிறார் தமிழக ஆளுநர்
சென்னை: அண்மையில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயத்துக்கு 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவாகி உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
"மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் நடத்தப்பட்ட சோதனையில், 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"கடந்த 13ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின்போது இரண்டு நாள்களில் மட்டும் 1,558 பேர் கைது செய்யப்பட்டனர்.
"அதன் பிறகும் நீடித்து வரும் நடவடிக்கையின்போது அதிகமானோர் சிக்கி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 94,560 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது," என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விழுப்புரம் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தெல்லாம் அந்த அறிக்கையில் விவரமாகத் தெரிவிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பபட்டுள்ளது.
இதற்கிடையே, கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அளிக்கப்படும் நிவாரணங்களை கொச்சைப்படுத்துவது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ளவருக்கு அழகல்ல என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆட்சிக்காலங்களிலும்கூட கள்ளச்சாராய மரணத்திற்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

