புதுடெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடைவிதிக்கக் கோரி, விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் அமர்வு விசாரித்து வந்தது.
விசாரணையின்போது, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படுத்துவதாக விலங்குகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டின.
ஆனால் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த நிகழ்வு என்றும் பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது வாதத்தை முன்வைத்தது.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்த ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு இந்திய அதிபர் ஒப்புதல் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு, இத்தகைய விளக்கங்களை கவனத்தில் கொண்டு, விலங்குகள் நல அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் செவிமடுத்த உச்ச நீதிமன்ற அமர்வானது, நேற்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதிக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு முன்வைத்த வாதங்களும் ஆவணங்களும் மனநிறைவு அளிப்பதாகவும் ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த அம்சம் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

