சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடையும் பயணத்தில் வெற்றிபெற வாழ்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், எல்லாருக்கும் சாதனை படைத்து, 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்.
"அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால், எத்தகைய உயரத்தையும் அடைந்துவிடலாம் என்பதற்கு உதாரணமாக, புகழின் உச்சத்திற்குச் செல்ல, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்டத்தின் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி எனும் சிங்கப்பெண்," என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட தமிழ்நாட்டின் முதல் பெண்மணி எனும் சாதனையை நோக்கி முத்தமிழ்ச்செல்வி சென்று கொண்டிருப்பதாகவும் 7,200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசியின் வாயிலாகப் பகிர்ந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
"எட்டி விடும் தொலைவில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும். இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட இவர் ஊக்கமாக விளங்கட்டும்," என முதல்வர் முக ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

