நடப்பாண்டில் 267,773 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வருகை
சென்னை: நடப்பாண்டில் மட்டும் 267, 773 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா். கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் இந்தச் சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொரீசியஸ் அதிபர் குமரி வருகை
குமரி: மொரீசியஸ் நாட்டின் அதிபர் பிருத்விராஜ் சிங் ரூபன் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். அவரது மனைவி சயுக்தா ரூபன், மொரீசியஸ் பிரதமா் பிரவிந்த் ஜக்நாதின் தாயாா் சரோஜினி ஆகியோரும் உடன் வந்துள்ளனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் நேரில் பார்த்த பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொள்ளும் மூவரும் குமரிக்கடலில் அமைக்கப்பட் டுள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றையும் பார்வையிடுகின்றனர். மூவரின் வருகையையொட்டி, குமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கல்லூரிக்கு வராமலேயே தேர்ச்சி: முன்னாள் எம்பி மீது புகார்
தூத்துக்குடி: கல்லூரிக்கு வராமலேயே தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, தூத்துக்குடி முன்னாள் மக்களவை உறுப்பினா் ஜெயதுரையின் பட்டத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களைப் படித்தவர்கள் எந்த வயதிலும் யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளைப் படிக்கும் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில், இயற்கை மருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொண்ட ஜெயதுரை, கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், அவர் அனைத்து தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுவது எவ்வாறு சாத்தியமானது என புகார் எழுந்தது. இதையடுத்து, அவருக்கு பட்டம் வழங்குவதை பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
பாம்பை மாலையாக அணிந்து மது வாங்க வந்த முதியவரால் பரபரப்பு
செங்கல்பட்டு: ஏழு அடி நீள பாம்பை தன் தோளில் போட்டுக்கொண்டு மதுக் கடைக்கு வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினார் அந்த முதியவர். பின்னர் அந்த பாம்பை வைத்து சிறிது நேரம் வேடிக்கை காட்டியவர், மது வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

