சென்னை: தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இரண்டு ராணுவத் தொழில் பூங்காக்கள் அமைய உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ' மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் ராணுவம், விமானத்தொழில் சார்ந்த தொழில் பூங்காக்களை அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் ராணுவத் தொழில் பூங்காக்கள் அமைய உள்ளன.
கோவை மாவட்டம் வாரப்பட்டியில் 400 ஏக்கரிலும் சூலூர் பகுதியில் 200 ஏக்கரிலும் ராணுவத் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக டிட்கோ நிறுவனத் திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசு ஆயுதங்கள் இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளதால், உள்நாட்டில் உள்ள ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகி உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்நாட்டில் ரூ1.25 லட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது," என்றார் கிருஷ்ணமூர்த்தி.
டிட்கோ என்பது தமிழகத்தில் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.ராணுவத் தொழில் பெருவழித்தடத்தை செயல்படுத்தும், முகமை நிறுவனமாகவும் செயல்படுகிறது.

