திருப்பூர் மாவட்டத்தில் நடமாடும் உணவு ஆய்வக வாகனம் அறிமுகம்
திருப்பூர்: உணவுப் பொருள்களில் கலப்படம் செய்யப்படு வதாக எழுந்துள்ள புகார்களின் பேரில் தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்் திருப்பூர் பகுதியில் இந்தப் பணிக்காக நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தி உள்ளார். உணவுப் பொருள்களின் தரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய ஏதுவாக இந்த ஆய்வக வாகனம் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதிகாரி பணியில் இருந்து விடுப்பு: இனிப்பு வழங்கி கொண்டாடிய மக்கள்
திருப்பூர்: மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை திருப்பூர் பகுதி மக்கள் இனிப்புகள் விநியோகித்து கொண்டாடி மகிழ்ந்தனர். வள்ளல் என்ற அந்த அதிகாரி மீது திருப்பூர் விவசாயிகள் பல்வேறு புகார்களைக் கூறிவந்தனர். அவர் கல் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும், அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பதை வள்ளல் தவிர்த்துள்ளார். இந்நிலையில், தன்மீதான புகார்கள் தொடர்பில் எந்தவிதமான பதிலும் அளிக்காத வள்ளல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாக திருப்பூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நடவடிக்கையை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டை பகுதியில் இன்றுமுதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற உள்ளது. மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இதையடுத்து அகழாய்வை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்கிறார்.
நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை
சென்னை: தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்பது மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 13 பேரும் கணிதத்தில் 17 பேரும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இயற்பியலில் 440 பேரும் வேதியியல் 107 பேரும் இச்சாதனையைப் புரிந்துள்ளனர். உயிரியல் பாடத்தில் 65 பேரும் தாவரவியலில் 15 பேரும் விலங்கியலில் 34 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
பட்டாசு ஆலை விபத்து: மூவர் பலி
விருதுநகர்: பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி மூன்று பேர் பலியான சம்பவம் சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ஊராம்பட்டி யில் இயங்கி வரும் ஆலையில், நேற்று முன்தினம் தொழி லாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். நண்பகல் சுமார் 12.30 மணியளவில் மருந்துக் கலவை தயார் செய்யும் அறையில் திடீர் வெடிச்சத்தம் கேட்டது. அதை யடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் சில அறைகள் இடிந்து தரைமட்டமாயின. தொழிலாளர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டபோதிலும், மூன்று பேர் பலியாகிவிட்டனர்.