காஞ்சிபுரம்: தமிழகத் தொல்லியல் துறை சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம், வடக்குப்பட்டு பகுதியில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கி உள்ளது. இங்கு பல்வேறு அரிய தொல்பொருள்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் துறை அதிகாரிகளும் ஆய்வாளர்களும் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குப்பட்டு ஊராட்சியில், கடந்த ஆண்டு முதற்கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. சுமார் நான்கு மாதங்கள் நீடித்த அகழாய்வின்போது தங்க அணிகலன்கள் உள்ளிட்ட அரிய பொருள்கள் கிடைத்தன.
இதன் மூலம் பழங்கால நாகரிகம் குறித்த விவரங்கள் தெரியவரும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பழங்கால கட்டட அமைப்புக்குச் சான்றாக சில பொருள்கள் கிடைத்தன.
பழைய கற்களை பயன்படுத்தி கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்றும் அது பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மேலும், பழங்கால கல் மணிகள், கண்ணாடி மணி, எலும்பு, செப்புக் காசு, பானையோடுகள், கண்ணாடிப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அதிகாரிகள் வடக்குப்பட்டு பகுதியில் கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு முதற்கட்ட அகழாய்வில் கிடைந்த பொருள்களை வகைப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், வடக்குப்பட்டு பகுதியில் கிடைத்துள்ள கற்கருவிகளை வைத்துப் பார்க்கும்போது அங்கு குறைந்தபட்சம் 12,000 முதல் ஒன்றரை லட்சம் ஆண்டுகள் முன்பு வரை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
"வடக்குப்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கால கருவிகள் அனைத்தும் கீழடியில் கிடைத்ததைவிட பழமை வாய்ந்தவை. கீழடி என்பது வளர்ந்த நாகரிகம் எனில், வடக்குப்பட்டியில் கிடைத்தவை கற்காலப் பொருள்கள்," என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, வடக்குப்பட்டு பகுதியில், இந்தியத் தொல்லியல் துறை கண்கானிப்பாளர் மு. காளிமுத்து தலைமையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி துவங்கி உள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு இந்தப் பணிகள் நடைபெறும் என்றும் மேலும் பல முக்கிய பொருள்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

