தஞ்சை: தமிழகத்தின் தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சிறிய 'டைடல்' (தகவல் தொழில்நுட்ப) பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் இப்புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தில் தற்போது இரண்டு, மூன்றாம் நிலையில் உள்ள நகரங்களில் ஏறத்தாழ 50 ஆயிரம் சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுரடி பரப்பில் ஏழு சிறிய 'டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் மூன்று இடங்களில் அத்தகைய பூங்காக்கள் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இப்பூங்காக்கள் மூலம் தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களிலும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வசித்துவரும் ஆயிரக்கணக்கான படித்த இளையர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.