கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது அரிய வகை நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதில் இசை, நடனக் கலைஞர்களைப் பற்றிய தகவல்கள் காணப்படுவதாக ஆய்வை மேற்கொண்ட தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பண்ணந்தூர் அருகே புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரிச்சந்திரன் கோவிலில் தாம் ஆய்வு மேற்கொண்டதாகவும் அக்கோவில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையானது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில், இசைக் கலைஞர் ஒருவர் தன் கையில் உள்ள சிறிய தப்பட்டை ஒன்றை இசைத்தவாறு காணப்படுகிறார்.
"அவர் மேல்சட்டை, வேட்டி, காதுகளில் பெரிய குண்டலங்களை அணிந்துள்ளார். மேலும், இசைக்கும்போதே, இவருடைய கால்களும் சிறிது அசைந்து ஆடுவதுபோல உள்ளது. அருகில் உள்ள மற்றொரு ஆண் சேவை ஆட்டம் எனப்படும் குருமன் பழங்குடி மக்களின் நடனத்தை ஆடுவதுபோல உள்ளது," என்கிறார் பேராசிரியர் சந்திரசேகர்.
இந்த நடுகல்லில் ஆடை, ஆபரணங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், நடனக் கலைஞரின் வலது கை மேல்நோக்கி இருப்பது நடன அசைவுகளை விளக்குவது போல் உள்ளது என்கிறார்.
"நடனக் கலைஞர் அணிந்துள்ள உடையானது, கழுத்திலிருந்து இடுப்பு வரை தற்கால தெருக்கூத்து கலைஞர்கள் அணிவது போன்ற ஒரே ஆடையாக காட்டப்பட்டுள்ளது. இடது புறம் ஒரு தூண் போன்று காணப்படுகிறது.
"பொதுவாக இசைக் கலைஞருடைய நடுகல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இசைக் கலைஞர் இசைப்பது போன்றும் நடனக் கலைஞர் நடனம் ஆடுவது போன்றும் ஒரே கல்லில் இருப்பது இங்கே காண முடிகிறது. இத்தகைய நடுகல் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை," என்கிறார் பேராசிரியர் சந்திரசேகர்.
தப்பட்டை,சேவை ஆட்டம் போன்றவை குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும் இது குருமன்ஸ் இன மக்களுடைய நடுகல் எனக் கூறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

