சென்னை: தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் பெரும் முறைகேடுகளும் குற்றச்சம்பவங்களும் நிகழ்வதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜூன் 6ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், அக்கூட்டமைப்பினர் கரூரில் உள்ள அரசு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.
குவாரிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் லாரி உரிமையாளர்கள் மீது தேவையின்றி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது என்றும் அவற்றைக் கைவிட வேண்டும் என கூட்டமைப்பின் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மணல் குவாரியில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் காரணமாக லாரி ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட வேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

