செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்

தர்்மபுரி: அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்மபுரி மாவட்டம், தொப்பூர் பகுதியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகளான ரமாதேவி, லட்சுமி தேவி ஆகிய இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இருவருமே 500க்கு 347 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். கூலித்தொழிலாளியின் மகள்களான இருவரும் மருத்துவர்களாக விருப்பம் கொண்டுள்ளனர்.

எவரெஸ்ட் உச்சியை அடைந்த இளையருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை சென்றடைந்து சாதனை படைத்துள்ள சென்னையைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை என்ற இளையருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அச்சிகரத்தை எட்டிய இரண்டாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ராஜசேகர். மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் தமது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் சாதித்துக் காட்டியுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற நுங்கு வண்டிப் போட்டி

புதுக்கோட்டை: பனை தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல், பனை மரத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் நுங்கு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. திருமயம் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற போட்டியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற சிறுவனுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள தங்கக்காசு பரிசாக அளிக்கப்பட்டது.

வெயில் தாக்கத்தால் சாலையில் சுருண்டு விழுந்து பலியான முதியவர்

வேலூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் பதிவானது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 40.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான கண்ணன் என்ற முதியவர், மதியம் 12.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்தபோது வெயிலின் கடுமையைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து பலியானார். இதற்கிடையே, ஊட்டி, கொடைக் கானல், ஏற்காடு உள்ளிட்ட அதிக குளிர் நிலவும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.