சென்னை: தமிழகத்தில் 33 விழுக்காடு அளவில் பசுமைப்போர்வையை உருவாக்குவதே அரசின் இலக்கு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகர் கடற்கரைப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெகிழிப் பொருள்களை உள்ளடக்கிய குப்பைகளைக் கடற்கரையில் போடுவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே கடற்கரையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
"நெகிழிப் பொருள்கள் பல ஆண்டுகளானாலும் மக்காத்தன்மை கொண்டதாக, கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. தமிழகம் 130,060 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு நாட்டிலும் 30 விழுக்காடு அளவுக்குப் பசுமை பரப்பு இருக்க வேண்டும் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். எனினும் தமிழகத்தில் பசுமை பரப்பு என்பது 30,842.22 சதுர கிலோ மீட்டர் என்ற அளவில்தான் உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர், மேலும் 12,076 சதுர கிமீ பரப்பில் பசுமைப்போர்வையை உருவாக்க வேண்டியுள்ளது என்றார்.
"இதைத் தமிழக அரசின் கடமையாகக் கருதுகிறோம். இந்தப் பணியை தமிழக அரசு புனிதக் கடமையாகக் கருதி, 33% பசுமைப் பரப்பு என்ற இலக்கை எட்டும். இதற்காகக் கோடிக்கணக்கான மரங்களை நடும் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

