தஞ்சை: டாஸ்மாக் மதுக்கூடத்தில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுவை வாங்கி அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பையும் புதிய விவாதங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இரண்டு பேரைக் காவல்துறை கைது செய்தது.
அண்மையில்தான் கள்ளச்சாராயம் அருந்திய 23 பேர் மரணம் அடைந்தனர். அதையடுத்து மாநிலம் தழுவிய அளவில் கள்ளச்சாராயம், முறைகேடாக மது விற்போர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த மீன் வியாபாரியான குப்புசாமி (68 வயது), கார் ஓட்டுநர் குட்டி விவேக் (36 வயது) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தங்களுடைய வழக்கமான பணியைத் தொடங்கும் முன்னர் வீட்டுக்கு அருகே உள்ள மதுக்கடைக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் மதுக்கடைகள் 12 மணிக்குத்தான் திறக்கப்படும் என்பதால், அருகில் உள்ள மதுக்கூடத்துக்குச் சென்று, அங்கு சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி அருந்தியுள்ளனர்.
ஆனால் மது அருந்திய சில நிமிடங்களிலேயே இருவரும் மயங்கிவிழுந்து உயிரிழந்தனர்.
இதனால் தஞ்சை மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அருந்தி இருவர் உயிரிழந்ததாகச் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால் இருவரும் அருந்திய மதுவில் நஞ்சு கலந்திருந்தது என்றும் இருவரும் உயிரை மாய்த்துக்கொள்ள திட்டமிட்டிருக்கலாம் என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மது விடுதி உரிமையாளரும் அங்கு பணியாற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுக்கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்கப்பட்டதைக் காவல்துறையிடம் தெரிவிக்காத டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

