முதல் நான்கு இடங்களைக் கைப்பற்றிய மாணவிகள்
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் (யுபிஎஸ்சி) மின்னியல் நிபுணரின் மகள் தமிழக அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.
இந்திய அளவில் அவர் 107ஆவது இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து, தமிழ்நாடு அளவில் முதல் இடத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் தகுதி பெற்றவர்கள், செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வை எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ஆளுமைத் தேர்வு நடைபெற்றது.
இந்த நடைமுறைகளுக்குப் பின்னர் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை நாடு முழுவதும் 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், முதல் நான்கு இடங்களைப் பெண்கள் பெற்றுள்ளனர் என்பது சிறப்பம்சம்.
இத்தேர்வில் சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜீஜீ தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது தந்தை மின் வல்லுநராகப் வேலை பார்த்து வருகிறார்.
சென்னை கல்லூரியில் படித்து வரும் ஜீஜீ மிகக் கடினம் எனக் கருதப்படும் இத்தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டுள்ளார்.
இதையடுத்து அவருக்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இம்முறை இஷிதா கிஷோர் என்ற பெண் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடுமையாகப் பயிற்சி பெற்று சாதித்துக் காட்டியதாக வெற்றி பெற்றவர்கள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் விரைவில் பணியமர்த்தப்படுவர் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.