சிங்கப்பூர், ஜப்பானுக்கு பயணத்தை தொடங்கிய முதல்வர்; வழியனுப்பிய அமைச்சர்கள்
சென்னை: சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காக தாம் அந்நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் இருந்து அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்ட அவரை அமைச்சர்களும் அதிகாரிகளும் வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்பது நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தாம் செல்ல இருப்பதாகவும் அங்கு சந்திக்கும் தொழிலதிபர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமது இந்தப் பயணத்தின்போது பல்வேறு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
"கடந்த முறை துபாய் பயணத்தின்போது கிடைக்கப்பெற்ற ரூ.6,100 கோடி மதிப்புள்ள முதலீடுகள் மூலம் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
"திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்துக்கான ரூ.2.95 லட்சம் கோடி மதிப்புள்ள புதிய முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், ஜப்பானிய முதலீட்டாளர்கள் தமிழகத்தை பெரிதும் விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தது.

