தங்கம் கடத்தி வந்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
சென்னை: கொழும்பில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.09 கோடி மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பெண்கள் கைதாகினர். அவர்கள் உள்ளாடை களுக்குள் மறைத்து கொண்டு வந்த 1.48 கிலோ எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.80.40 லட்சமாகும். இதேபோல் அபுதாபியில் இருந்து ஆடவர் ஒருவர் கடத்தி வந்த 518 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ.28.50 லட்சமாகும்.
சட்டவிரோத மதுக்கூடங்கள்: டாஸ்மாக், காவல்துறை கடும் எச்சரிக்கை
சென்னை: சட்டவிரோதமாக செயல்படும் மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை உடனடியாக மூடப்படும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படு வர் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுக்கூடங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள் ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார். மதுக்கடைகள் திறப்பதற்கு முன்போ, மூடிய பிறகோ மதுப் புட்டிகளை விற்க அனுமதியில்லை என்றார் அவர்.
கோவிலில் உள்ள சாமி சிலைகளை உடைத்து அட்டூழியம்
திருப்பூர்: சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் பதற்றம் நிலவியது. அங்குள்ள லிங்கேஸ்வரர் கோவிலுக்குள் நுழைய முடியாததால், கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்த சிலைகள் உடைத்துச் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்க பெண் காவலர்கள் நியமனம்
கோவை: தமிழக காவல்துறையில் முதன்முறையாக மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிக்க நான்கு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை காவல்துறையில் உள்ள ஏழு மோப்ப நாய்களுக்கு இவர்கள் பயிற்சி அளிப்பார்கள். கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் துப்புதுலக்க இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக கோவை காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

