குட்கா, பான்மசாலாவுக்குத் தடை
சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருள்களைத் தயாரித்தல், விநியோகித்தல் போன்றவற்றுக்கான தடையை நீட்டித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பட்டாசு மூட்டைகள் வெடித்து இரண்டு பேர் மரணம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே சி.பள்ளிப் பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த சாமி ஊர்வலத்தில் எதிர்பாராத விதமாக பட்டாசு மூட்டைகள் வெடித்ததில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். பட்டாசு மூட்டைகள் இருந்த வாகனமும் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்
5 வயது வரை சிறாருக்குப் பேருந்து பயணம் இலவசம்
சென்னை: தமிழ்நாட்டில், ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்குப் பேருந்தில் கட்டணம் கிடையாது என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10,000 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு பேருந்துகளில் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்குப் பயணச் சீட்டு எடுக்கத் தேவையில்லை. அந்த வயது இப்போது ஐந்தாக உயர்த்தப்பட்டு உள்ளது.
படகில் வந்த 6 பேர்; விசாரணை
தூத்துக்குடி: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகு ஒன்றின் மூலம் தூத்துக்குடி பகுதிக்கு வந்த ஆறு பேரையும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக சென்னைக்கு கொண்டு சென்றனர்.
கேரள மாநிலம் கொச்சி கடல் பரப்பில் ஒரு கப்பலில் ரூ.15,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் அண்மையில் கைப்பற்றப்பட்டது.
அதன் தொடர்பில் அதிகாரிகள் தங்கள் வேட்டையைத் தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் அந்த ஆறு பேரும் படகுடன் சிக்கினர். அந்தப் படகில் சந்தேகப்படும் அளவுக்குப் பொருள்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர்கள் தீவிரமாக விசாரிக்கப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலுக்கு அடியில் பதுக்கல்
மண்டபம்: தமிழ்நாட்டில் மண்டபத்தில் கடலுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ கடல் அட்டைகளை கடல் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முனைக்காடு பகுதியில் கடலில் ஒரு நெட்டி மிதந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கயிற்றை இழுத்துப் பார்த்தபோது கடலுக்கு அடியில் ஒன்பது மூட்டைகளில் 200 கிலோ பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்த கும்பல் குறித்து விசாரிக்கிறார்கள்.

