தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஐந்தாண்டுகளுக்கு முன் நடந்த போராட்டத்தில் குடிமக்கள் 13 பேர் காவல்துறை அதிகாரிகளின் குண்டுகளுக்கு இரையாயினர்.
அந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடையில் நடந்த அந்தக் கொலைகளுக்கு 17 காவல்துறை அதிகாரிகளும் நான்கு வருவாய் துறை அதிகாரிகளும் காரணம் என்று அந்தக் குழு முடிவு செய்தது. இருந்தாலும் ஒருவர் மீது கூட இன்னமும் வழக்குத் தொடுக்கப்படவில்லை.
தான் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக இப்போதைய அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளரான மரினா பிரபு என்பவர் கூறினார்.
அந்தச் சம்பவம் பற்றி முதலில் சிபிசிஐடி விசாரித்தது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சிபிஐ தன்வசம் எடுத்துக்கொண்டது.
சிபிஐ, திருமலை என்ற காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 101 பேர் மீது புகார்களைத் தாக்கல் செய்தது. அந்த அதிகாரி பிறகு டிஎஸ்பி பதவி உயர்வு பெற்றார்.

