விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள இளங்கியனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்- கொளஞ்சியம்மாள் மகன் வேல்முருகன். இவருக்கு கீதா என்பவ ருடன் திருமணம் ஆகி இரு பிள்ளைகள் உள்ளனர். வேல்முருகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் 29ஆம் தேதி கீதா முள்ளங்கி சாம்பார் சமைத்தார். அதனை மாமனார் சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணன் கிருஷ்ணன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நித்தீஸ்வரன் என்ற சிறுவன் என 4 பேரும் சாப்பிட்டனர்.
அப்போது திடீரென கொளஞ்சியம்மாளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. தொடர்ந்து அவரது கணவர் சுப்பிரமணியனுக்கும் சிறுவர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில் கொளஞ்சியம்மாள், சுப்பிரமணியன், பக்கத்து வீட்டு சிறுவன் நித்தீஸ்வரன் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
இது குறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் ஓராண்டுக்கும் மேல் நடத்திய விசாரணையில், வேல்முருகனின் மனைவி கீதாவிற்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த ஹரிஹரன், 43, என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை வெளிநாட்டிலிருந்த மகன் வேல்முருகனிடம் தாய் கொளஞ்சியம்மாள் கூறியதால் ஆத்திரமடைந்த மருமகள் கீதா முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. கீதாவையும் ஹரிஹரனையும் காவல்துறை கைது செய்து உள்ளது.

