பழநி: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா, 28. 2022 செப்டம்பர் 19ஆம் தேதி இவர் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். பக்தி பரவசத்தில் உண்டியலில் செலுத்த துளசி மாலையைக் கழற்றியபோது கழுத்திலிருந்த 1 3/4 பவுன் தங்கச் சங்கிலியையும் சேர்த்து தவறுதலாக உண்டியலில் செலுத்திவிட்டார்.
தவற்றை உணர்ந்த பின்னர் நடந்ததை விளக்கி கோயில் நிர்வாகத்திற்கு அவர் கடிதம் அனுப்பினார். தங்கள் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதென்றும் அதனால் உண்டியலில் செலுத்தப்பட்ட தங்கச் சங்கிலியைத்திரும்ப வழங்குமாறும் அக்கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் சொன்னது உண்மைதானா என்பதை கண்காணிப்பு படக்கருவி (சிசிடிவி) மூலம் அதிகாரிகள் உறுதி செய்தனர். இருப்பினும், விதிப்படி, உண்டியலில் செலுத்தப்பட்ட பொருள் திருப்பி தரப்படுவதில்லை.
எனவே, பழநி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், ரூ.1.09 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை அப்பெண்ணிற்கு வழங்கினார். நேற்று முன்தினம் சங்கீதா தனது குடும்பத்தினருடன் கோயில் அலுவலகத்திற்கு வந்து, கண்ணீர்மல்க தங்கச்சங்கிலியை பெற்றுச் சென்றார்.

