சென்னை: சென்னை மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமான கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்டில் இருந்து எத்தியோப்பியா வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அதில் ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இம்மானுவல், 32, என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக அவர் கூறினார்.
மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதனால் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த கைப்பிடியுடன் கூடிய சூட்கேஸ் வழக்கத்துக்கு மாறாக சற்று அதிக எடையுடன் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த சூட்கேசை பிரித்து சோதனை செய்தனர்.
சூட்கேசின் அடிப்பாகத்தில் ரகசிய அறை வைத்து அதில் விலை உயர்ந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
ரூ.4 கோடி மதிப்புள்ள 1 கிலோ 999 கிராம் போதைப்பொருளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதனை கடத்தி வந்த இம்மானுவலைக் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக அதனை கடத்தி வந்தார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? அனைத்துலகப் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள போதைக் கடத்தல் கும்பல் யார்? என்ற கேள்விகளுக்கு விடைதேட தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைய நாள்களில் இந்த அளவுக்கு அதிக சந்தை மதிப்புள்ள போதைப்பொருள் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் பிடிபட்டு இருப்பது இது முதல்முறை.
பெருமளவில் போதைப் பொருளைக் கடத்தும் கும்பல் சென்னையைப் பயன்படுத்து வதும் தெரியவந்தது.

