தென்காசி: பள்ளி வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் சங்கரன்கோவில் அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (45). இவர், தனது மனைவி வேலுத்தாய் (35), மாமியார் உடையம்மாள் (60), மகன் மனோஜ் குமார் (22) ஆகியோருடன் இரு தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் சென்றிருந்தார்.
அங்குள்ள முருகன் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்த அவர்கள் புதன்கிழமை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பனவடலிசத்திரம் என்ற பகுதியில் அவர்களுடைய கார் சென்று கொண்டிருந்தபோது, அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதாகத் தெரிகிறது. பின்னர் எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மீது பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதியது.
இதில், அந்தக் கார் அப்பளம் போல் நொறுங்கியதாகவும் அதில் பயணம் செய்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்த விபத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே சேலம் அருகே நிகழ்ந்த மற்றொரு சாலை விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உடனடியாக தனது காரை நிறுத்தி ஐந்து பேரையும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார்.
அதன் பிறகே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

