புதுடெல்லி: தமிழ் மொழி என்பது நம் மொழி, அது ஒவ்வொரு இந்தியரின் மொழி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மூன்று நாடுகளுக்கு மேற்கொண்ட அதிகாரத்துவ பயணம் முடிந்து நாடு திரும்பிய அவர் டெல்லி விமான நிலையத்தில் பாஜக தொண்டர்களை சந்தித்துப் பேசியபோது, உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழிதான் என்றார்.
"அந்த மொழி தந்த திருக்குறளை பப்புவா நியூ கினி நாட்டில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அதை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது," என்றார் பிரதமர் மோடி.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல்வேறு தளங்களில் அணுக்கமாகச் செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பப்புவா நியூ கினி நாட்டின் தலைநகரில், இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடந்தது.
தமது பயணத்தின்போது அம்மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேலும், இந்த மாநாட்டின் போதுதான் அவர் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.
உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசும்போது தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்கூறி வருகிறார் பிரதமர் மோடி.
அவ்வப்போது தமது சமூக ஊடகப் பதிவுகளிலும் அவர் திருக்குறளின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார்.
இப்போதெல்லாம் உலக நாடுகள் பலவும் இந்தியா தற்போது என்ன சிந்திக்கிறது என்பதை அறிய ஆர்வமுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா நெருக்கடிக் காலத்தின்போது தடுப்பூசியை உலக நாடுகளுக்கு அளித்தது பற்றி வெளிநாட்டில் கேள்வி எழுப்பப்படும்போது, இந்தியா புத்தரின் மண் என்றும் இந்தியா எதிரிகளையும் அக்கறையுடன் நடத்தும் என்றும் தாம் பதிலளித்ததாகத் தெரிவித்தார்.