செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

அனுமதியின்றிச் செயல்பட்ட ஐம்பது மதுக்கூடங்கள் மூடப்பட்டன

விருதுநகர்: கள்ளச் சாராயம் அருந்தி பலர் பலியாகிவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய வியாபாரிகளைக் கைது செய்து வருகின்றனர். மேலும், அனுமதியின்றி இயங்கி வரும் மதுக்கூடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் அனுமதியின்றி இயங்கிய ஐம்பது மதுக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்காக சாத்தூர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சேத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையின் துணையோடு டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம்: நெகிழும் உம்மிடி குடும்பத்தார்

சென்னை: புதிய நாடாளுமன்றத்தில் தங்களது குடும்பத்தினர் தயாரித்த செங்கோல் இடம்பெறுவது மிகப்பெரிய பாக்கியம் என உம்மிடி குடும்பத்தைச் சேர்ந்த ஜிதேந்தர் உம்மிடி தெரிவித்துள்ளார். இந்தச் செங்கோல் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. மேலும், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன. இந்நிலையில், அக்குறிப்பிட்ட செங்கோல் தங்கள் குடும்பத்தின் சொத்து என்று ஜிதேந்தர் உம்மிடி கூறியுள்ளார். "எனது பாட்டனாரின் உழைப்பு இன்று எங்களுக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளது. இந்தச் செங்கோலின் பெருமையை கேள்விப்பட்டு, புதிய நாடாளுமன்றத்தில் இது இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். இந்த வாய்ப்பை பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்," என்று ஜிதேந்தர் தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் குப்பைக்குச் செல்லும் பத்து டன் ஊட்டி கேரட்

சென்னை: கோயம்பேடு காய்கறிச் சந்தையில் விற்பனை யாகாத பத்து டன் கேரட் குப்பையில் வீசப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாள்களாக ஊட்டியிலிருந்து வரும் கேரட் வரத்து அதிகரித்துள்ளது. நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பத்து லாரிகளில் நூறு டன் அளவிலான கேரட் வருவது வழக்கம். ஊட்டியில் இருந்து வரத்து அதிகரித்துள்ள நிலையில் சிறு வியாபாரிகள் கேரட் வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே விற்பனை ஆகாமல் கேரட் மூட்டை, மூட்டையாக தேங்கி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதிபர் வருகை ரத்து: மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு

சென்னை: கிண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிபர் திரௌபதி முர்முவின் வருகை ரத்தானதால் திறப்பு விழா ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 230 கோடி ரூபாய் செலவில் ஆயிரம் படுக்கை வசதியுடன் ஆறு தளங்களுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 5ஆம் தேதி அதிபர் முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.