நாற்பது இடங்களில் வருமான வரித்துறை சோதனை; அதிகாரிகள் தாக்கப்பட்டனர்
சென்னை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய நாற்பது இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிகாரிகளை தாக்க முற்பட்டதாக சில இடங்களில் பதற்றம் நிலவியது.
இந்நிலையில், தாம் வரி ஏய்ப்பு ஏதும் செய்யவில்லை என்றும் ஆதாரங்கள் இருந்தால் தம் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழக அமைச்சரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வருமானவரித்துறை மேற்கொண்ட நடவடிக்கை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று காலை அமைச்சருடன் தொடர்புடைய வெவ்வேறு இடங்களில் அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த திமுகவினர் அந்த இடங்களில் குவியத் தொடங்கினர்.
சில இடங்களில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர்களுடைய வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கரூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனங்களை திமுக தொண்டர்கள் அடித்து உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக ஊடகச் செய்தி குறிப்பிட்டது.
இதையடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரிகள் தஞ்சம் புகுந்தனர். இதனால் சோதனை நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமது வீட்டில் சோதனை நடக்கவில்லை என்றும் தமது சகோதரரின் வீட்டுக்குத்தான் அதிகாரிகள் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
"இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வது எங்களுக்குப் புதிதல்ல. வருமான வரித்துறையினரின் சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக சோதனை நடக்கும் இடங்களில் திமுகவினர் யாரும் இருக்கக் கூடாது என கட்சியினரிடம் தொலைபேசி மூலம் அறிவுறுத்தி உள்ளேன்," என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையின் மூலம் பாஜக தனது தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்தி உள்ளதாக திமுக மூத்த பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி சாடியுள்ளார்.