சென்னை: போலி ஆவணங்களை அளித்து கைப்பேசி இணைப்புகளைப் பெற்றது தொடர்பில் தமிழக அரசும் காவல்துறையும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் 56 ஆயிரம் சிம் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்துமே போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் இணைய குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முறைகேடாக வாங்கப்பட்டுள்ள சிம் அட்டைகளின் துணையோடு பல்வேறு மோசடிகள் நிகழ்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்ட தமிழக காவல்துறையினர் பல்வேறு முக்கியத் தகவல்களை சேகரித்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் கைப்பேசி நிறுவனங்களுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
முதற்கட்டமாக, போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 55,982 சிம் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன. முறைகேட்டில் ஈடுபட்ட சிம் அட்டை விற்பனையாளர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இது தொடர்பான அறிக்கை மத்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
"விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சிம் அட்டைகள் முறைகேடு தொடர்பாக 12 வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம். ஐந்து பேரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என காவல்துறை தெரிவித்துள்ளது.

