தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகனேரி பகுதியில் சோழர்களின் வரலாற்றை விவரிக்கும் ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுவடியியல் பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் திருச்செந்தூர் பகுதியில் தாம் கள ஆய்வு மேற்கொண்டதாகவும் அப்போது ஆறுமுகனேரியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் த.தவசிமுத்து மாறனிடம் இருந்து 14 அரிய ஓலைச் சுவடிகளைப் பெற்றதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த ஓலைச் சுவடிகளில் சோழர்கள் வரலாறு தொடர்புடைய தகவல்கள் காணப்படுவதாகவும் அவை மிகவும் அரிதான ஓலைச்சுவடிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"கடந்த கிபி.11 முதல் 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்துடன் தொடர்புடைய விவரங்கள் இந்த ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றுள்ளன.
"அவற்றுள் பல இதுவரை தெரிந்திராத தகவல்கள் ஆகும். ஓலைச்சுவடிகளில் மேலும் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன," என்று பேராசிரியர் தாமரைப் பாண்டியன் கூறிஉள்ளார்.
தமிழகம் முழுவதும் கோவில்கள், மொழி ஆர்வலர்கள் வசம் உள்ள அரிய வகை ஓலைச்சுவடிகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொகுத்து வருகிறார் தாமரைப்பாண்டியன்.
இதன் மூலம் பல்வேறு அரிய ஓலைச்சுவடிகள் மீட்கப்பட்டு, தொகுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

