சென்னை: சென்னையில் செயல் படும் பிரபல ஸ்டான்லி மருத்துவ மனை உட்பட தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகள், புதுவையில் ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இள நிலை மருத்துவக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஸ்டான்லியைத் தவிர திருச்சி கி.ஆ.பெ. விசுவ நாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீ காரமும் ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனமும் அங்கீகாரத்தை இழக்கிறது.
இதனை எதிர்த்து மூன்று மருத்துவக் கல்லூரிகளும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் விதிமுறைகளை மீறியதற்காக மூன்று கல்லூரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளன. ஆதார் அடிப்படையிலான கைரேகை வருகைப் பதிவேட்டில் விவரங்களைப் பதிவு செய்யாதது, கல்லூரிகளில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு படச்சாதனங்கள் சரியாகச் செயல்படாதது ஆகியவை அங்கீகாரம் ரத்து செய்யப்படு வதற்கான காரணங் களாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஆசிரியர்களின் விடுப்பு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவரும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், தேசிய மருத்துவ ஆணையத்தின் மூன்று கல்லூரி களுக்கு எதிரான நடவடிக்கை கடுமையானது என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன், "படச்சாதனம் செயல்பட வில்லை என்பதால் மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதா, சிறு சிறு குறைகளை பூதக் கண்ணாடி போட்டு மத்திய அமைப்புகள் தேடுகின்றன" என்று சாடினார். மூன்று மருத்துவக் கல்லூரிகளும் பழமை வாய்ந்தவை என்றார். அவர். மூன்று மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 500 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன.

