நீலகிரி: அமைச்சர் செந்தில் பாலாஜியை மையப்படுத்தி வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது.
நேற்று முன்தினம் அமைச்சருடன் தொடர்புடைய நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றபோது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் முடிந்தது.
இது தொடர்பாக அமைச்சர், வருமான வரித்துறை என இருதரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் கரூர் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தாக்குதலுக்கு ஆளான நான்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
இதற்கிடையே நேற்று காலை முதல் கரூர், கோவை, சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை நடவடிக்கை முழுமையடைந்த பின்னர், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக மின்சாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் செந்தில் பாலாஜி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
மேலும், மின்சாரத் துறையிலும் ஆயத்தீர்வைத் துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அமைச்சரின் சகோதரர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் ஒரே சமயத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது சில இடங்களில் அதிகாரிகளின் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இரு தரப்பினரும் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தனர். அவற்றின் பேரில் முதற்கட்டமாக திமுகவினர் ஐம்பது பேர் மீது கரூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.