ஈரோடு: ஐந்து மணி நேரம் நீடித்த காட்டாற்று வெள்ளத்தால் (படம்) ஈரோடு மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு வரை அனல் காற்று வீசிய நிலையில், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் மூன்று மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கோபிசெட்டிப்பாளையம், பெருந்துறை, தாளவாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, சென்னிமலை, குண்டேரி பள்ளம் அணைப் பகுதி, பர்கூர், கடம்பூர் மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பள்ளத்தாக்குகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சக்கரப்பள்ளம் என்ற பகுதியில் காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்தது. இதன் காரணமாக குரும்பூர் உள்பட பல்வேறு மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து முடங்கியது.
ஏறத்தாழ ஐந்து மணி நேரம் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பின்னர் தண்ணீர் குறையத் தொடங்கியதால் துண்டிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததும், போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. ஈரோடு மாநகரிலும் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணி நேரத்துக்குக் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் சில நாள்களுக்குக் கோடை மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

