நீலகிரி: மதுக்கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் மதுப்புட்டிகளை வீசித் தாக்குதல் நடத்தியதால், காவல்துறையினர் தற்காப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் காவல்துறையினர் வழக்கமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள மதுக்கடை திறந்திருந்தது. மேலும் விளக்குகளும் எரிந்ததால் சந்தேகம் வலுக்கவே, விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
கடைக்கு அருகே சென்றபோது இரு ஆடவர்கள் நின்றிருப்பதும் மதுப்புட்டிகளை ஒரு சாக்குப் பைக்குள் எடுத்து வைப்பதும் தெரிந்தது. மேலும், கடைக்குள் இருந்த பணப்பெட்டி உடைந்திருப்பதைக் கண்டதும் அங்கு கொள்ளை முயற்சி நடப்பது உறுதியானது.
இதையடுத்துக் கடைக்குள் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவ்விரு ஆடவர்களும் சரணடைய மறுத்து, காவல்துறையினர் மீது மதுப்புட்டிகளை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினர். அதையும் மீறி காவலர்கள் நெருங்கி வந்தபோது கத்தியால் தாக்கினர்.
காவலர்கள் இருவர் படுகாயம் அடைந்ததையடுத்து, கொள்ளையர்கள் மீது தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் ஒரு கொள்ளையன் காலில் குண்டு பாய்ந்ததில் அவன் அங்கேயே சுருண்டு விழுந்தான். மற்றொருவன் தப்பியோடினான். விசாரணையில் இருவரும் நீலகிரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தப்பியோடிய கொள்ளையனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.

