செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

முடிவுக்கு வருகிறது கத்திரி வெயில்

சென்னை: தமிழகத்தை வாட்டிவந்த கோடை வெயிலின் தாக்கம் இனிவரும் நாள்களில் குறையும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்றுடன் முடிவடையும் என்றும் சில மாவட்டங்களில் மட்டும் கோடை மழை பெய்யும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். எனினும், மேலும் சில நாள்களுக்கு பகல் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்கு: எட்டு பேர் கைது

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புள்ள இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அதிகாரிகளை தாக்கியதாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலா பதவியேற்றுக் கொண்டுள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். புதிய தலைமை நீதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஞ்சய் விஜய்குமார், கடந்த 1985ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கி, 2010ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த வந்த நிலையில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியுள்ளார்.

மாமல்லபுரத்தில் 'சி20' மாநாடு

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் 'சி20' என்ற பெயரில் நடைபெறும் அனைத்துலக மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள 'ஜி20' மாநாட்டுக் கான முன்னோட்டமாக 'சி20' மாநாடு நடத்தப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். "இன்று உலகம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய பேரழிவை எதிர்நோக்குகிறோம்," என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டி: தமிழகத்துக்கு அனுமதி

சென்னை: 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள் ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது. "கேலோ இந்தியா' போட்டிகளை நடத்த தகுதியான மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி," என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை

சென்னை: தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்த ஆருத்ரா நிறுவனம் தொடர்பான வழக்கில் அடுத்த இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்படுகிறது. மக்கள் இழந்த பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.