சென்னை: தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க மத்திய பாஜக அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மூன்று மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருப்பதாக வைகோ கவலை தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள மூன்று கல்லூரிகளிலும் பேராசிரியர், மாணவர்களின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயோ - மெட்ரிக் வருகைப் பதிவு, கண்காணிப்புக் கருவிகள் ஆகியவை முறையாக செயல்படவில்லை என தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.
இந்த ஏற்பாடுகளை முறையாகப் பராமரிக்காததும் அக்கல்லூரிகள் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
"மேற்கண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
"மிகச் சதாரணமான காரணங்களைக் கூறி தமிழகத்தில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க மத்திய பாஜக அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.
"இதனை நியாயப்படுத்தவே முடியாது," என வைகோ தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.