சென்னை: சிங்கப்பூருக்குக் கடத்தப்பட இருந்த ரூ.3.37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து அமெரிக்க டாலர், சவுதி அரேபியா ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் வழக்கமான பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி மீது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்றபோது தனது உள்ளாடைக்குள் வெளிநாட்டுப் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் சிறிய அளவிலான ரகசிய அறைகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் பார்த்தபோது மேலும் கட்டுக்கட்டாக வெளிநாட்டுப் பணம் சிக்கியது.
மொத்தத்தில் அவர் ரூ.3.37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது அம்பலமானது.
எனினும் வேறு ஒருவருக்காக அவர் அந்தப் பணத்தைக் கொண்டு செல்ல இருந்ததும் அது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது.
பயணியிடம் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து அனுப்பியது யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.