சென்னை: கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையை அறவே துடைத்தொழிப்பதில் காவல்துறைக்குப் பொதுமக்கள் உதவ வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து விவரமறிந்தோர் கைப்பேசி மூலம் காவல்துறைக்குத் தகவல் அளிக்கலாம் என செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
மேலும், போதைப்பொருள்களை கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
"சென்னை பெருநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
"அதன் மூலம் மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம், போலி மதுபானம், கஞ்சா, மெத்தனால் உள்ளிட்ட போதைப்பொருள்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
"வாகனத் தணிக்கைகள், தீவிர சுற்றுக்காவல் பணிகள், சிறப்பு அதிரடி தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
"இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

