சென்னை: தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இயற்கை வளங்களைக் காக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி பச்சைமலையில் சட்ட விரோதமாக செம்மண் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது நரசிங்கபுரம் ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன் தலைமையிலான கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
மணல் கொள்ளையைத் தடுக்க முயலும் அதிகாரிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிப்போர் எந்த அச்சமும் இல்லாமல் வலம் வருவதாகவும் இயற்கை வளங்களை காக்க நினைக்கும் அதிகாரிகள் அஞ்சி நடுங்க வேண்டியுள்ளதாகவும் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார்.
மணல் கொள்ளையில் ஈடுபட்டாலோ, அதைத் தடுக்கும் அதிகாரிகள் மீது கை வைத்தாலோ, அரசு எந்திரம் நம்மை சும்மா விடாது என்ற அச்சம் மணல் கொள்ளையர்களுக்கு ஏற்படும் அளவுக்கு இயற்கை வளங்களைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் தவறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
"கடந்த காலங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீதும் மணல் கொள்ளையைத் தடுத்த அதிகாரிகளைத் தாக்கியவர்கள் மீதும் தமிழக அரசும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு நல்லதல்ல," என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு ஆளாகும் அரசு அதிகாரிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் பாமக தலைவர் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரேமலதா எச்சரிக்கை
இதற்கிடையே, தமிழகத்தின் இயற்கை வளங்களை அழிக்க அனுமதிக்கக்கூடாது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தென்காசி தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழக கனிம வளங்கள் தென்காசி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

