சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ரூ.818.90 கோடி மதிப்பிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஒன்பது நாள் பயணமாக சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாயகம் திரும்ப உள்ளார். அவருக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பை அளிக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக புதிய தொழிற்சாலையை நிறுவிடும் வகையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
மொத்தம் ரூ.128 கோடி முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த கண்காணிப்புக் கருவிக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் பரப்பில் ரூ113.90 கோடி முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் புதிய ஆலையை நிறுவ கியோகுட்டோ சாட்ராக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருசக்கர, நான்குசக்கர வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.155 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் கட்டுமானம், கட்டுமான பொறியியல், அதுதொடர்பான வணிகத்தை மேற்கொள்ள ஷிமிசு என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி உள்ளது.
மேலும், கட்டுமானத் துறையில் ரூ.200 கோடி முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவவும் விண்வெளி, பாதுகாப்பு, கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை ரூ.200 கோடி முதலீட்டில் நிறுவவும் ஜப்பானிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.