புதுவை: புதுவையில் மத்திய அரசின் ஆதரவோடு 'சிபிஎஸ்இ' பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை மாநில அரசு கைவிட வேண்டும் என புதுவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவைக்கான பாடத் திட்டத்தில் தமிழை விருப்பப் பாடமாக அறிவித்திருப்பதை தமிழை அழிக்க நினைக்கும் பாஜகவின் கொள்கையாகவே பார்க்க முடிகிறது என்றார்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவசர கதியில் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்றும் சிவா கூறினார்.
தமிழகத்தில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக அறிவித்திருப்பது போல் புதுவையிலும் அறிவிக்கப்பட வேண்டும். திட்டமிட்டே தமிழை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுவதை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ் அழியும் என்பதை புதுவை மாநில அரசு உணர வேண்டும்," என்றார் சிவா.
புதுவை அரசுப் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை, பயிற்சி பெற்ற போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் எப்படி சிபிஎஸ்இ கல்வி முறையை முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் மொழியின் சிறப்பை எதிர்கால மாணவ சமுதாயமும் அறிந்து கொள்ளக்கூடாது என்கிற மாற்றாந்தாய் மனப்பான்மை கைவிடப்பட வேண்டும் என்றும் புதுவையில் தமிழைக் கட்டாயப்பாடமாக பயில்வதற்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"தமிழை, தமிழர் பண்பாட்டை புகழ்வதுபோல் பாசாங்கு செய்து கொண்டு, தமிழை அழிக்க நினைக்கும் பாதக நிலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
"எல்லா வகையிலும் பாதிப்பை உருவாக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை இக்கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டு வருவதை அரசு கைவிட்டு, படிப்படியாக கொண்டுவர வேண்டும்," என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா மேலும் கூறியுள்ளார்.