திருப்பூர்: மதிமுகவில் இருந்து அதன் மூத்த பிரமுகர்களில் ஒருவரான துரைச்சாமி விலகி உள்ளார்.
அக்கட்சியின் அவைத்தலைவரான அவர், மதிமுக இனி தனியாக வளர்ச்சிகாண வாய்ப்பில்லை என திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பி்ட்டார்.
அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினாலும் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், மதிமுக தலைவர் வைகோவின் பேச்சாற்றல் என்பது நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததே தவிர தற்போது எதுவும் இல்லை என்றார்.
"ஏற்கெனவே நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கருணாநிதியின் முன்னணி தோழர்களை மதிமுகவில் இருந்து விலகுமாறு கூறியதுடன், அவர்கள் திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுத்தான் உதயசூரியன் சின்னம் கொடுக்கப்பட்டது.
"அப்படி என்றால் ஏற்கெனவே நாம் திமுகவில் இணைந்துவிட்டோம். இனி தனிக்கட்சி வைத்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை. இனியும் ஓர் அமைப்பை வைத்து நடத்த முடியாது," என்றார் திருப்பூர் துரைச்சாமி.
மதிமுகவில் வரும் ஜூன் மாதம் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் துரைச்சாமி.
இந்த நிலையில் மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தாம் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
"திமுகவுக்கு ஆதரவளிக்கிறேன். வேறு எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை. எனது தொழிற்சங்கத்தை தொடர்ந்து நடத்த முடிவெடுத்துள்ளேன்," என்றார் துரைச்சாமி.
மதிமுகவில் வைகோவின் மகனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் இவர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.